தமிழகம் – தமிழர்கள்
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியான நம் தமிழ்க்குடி நெடிதோங்கிய பாரம்பரியத்தையும் உயரிய கலாச்சாரத்தையும் கொண்டது. இன்றைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர். தமிழர்களது வாணிப எல்லை கிழக்கே சீனாவின் காண்டன் துறைமுகத்தையும் மேற்கே மெசபடோமியாவையும் இணைத்தது.
உலகெங்கிலும் தமிழ் வணிகர்களின் குடியிருப்புகள் உண்டாகியிருந்த அக்காலகட்டத்தில் தமிழகம் பரபரப்பான துறைமுகங்களை கொண்ட உன்னத நாடாக உருவெடுத்திருந்தது.கிரேக்க ரோம பாரசீக வணிகர்களோடு சீனர்களும் வளம்கொழிக்கும் தமிழகத்தின் துறைமுகப்பட்டிணங்களை நோக்கி வந்தவண்ணமிருந்தனர்.
தமிழகத்தில் இஸ்லாம் –
கி.பி.7ம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் அரேபிய மண்ணில் தோன்றி இஸ்லாம் என்னும் சத்திய சமாதான மார்க்கத்தை போதிக்க துவங்கியவுடன், ‘யவனர்கள்’ என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் அரேபிய வணிகர்கள் தங்களது கொள்பொருட்களோடு இஸ்லாமிய சன்மார்க்கத்தின் கொள்கைகளையும் இம்மண்ணில் கொண்டுவந்து சேர்த்தனர் .
அரேபியர்களின் வணிகத்தையும் வாய்மையையும் காலங்காலமாக அறிந்திருந்த தமிழர்கள், தங்களது உடன்பிறவா சகோதரர்களான அரேபியர்களின் மார்க்கத்தை அறிந்துகொள்வதில் எவ்வித தயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
அதற்குக்காரணம் யவனர்களின் ஓரிறைக்கொள்கை தமிழர்களுக்கு காலங்காலமாக பரிட்சயப்பட்ட ஒன்றாக இருந்தது.திருமூலர் முதல் பல தெய்வீக புருஷர்கள் இம்மண்ணில் இறைவன் ஒருவனே என்று போதித்திருந்தனர், இருப்பினும் அதனை முறைப்படுத்தி மார்க்கமாக உருவாக்கியிருந்த இஸ்லாத்தை தமிழர்கள் எளிதில் ஏற்றனர். அதுமட்டுமின்றி முதல்மனிதர் ஆதம் (அலை) முதலாக பல நபிமார்கள் இப்புனித பிரதேசத்தில் தோன்றியிருந்ததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
மூவேந்தர்களின் ஆட்சியிலும் இஸ்லாமிய மார்க்கம் எவ்வித எதிர்ப்புமின்றி மக்கள் மத்தியில் சென்றடைந்தது. தென்னிந்திய மக்கள் ஓரிறைக்கொள்கையை மனமுவந்து ஏற்க பெருங்காரணமாய் இருந்தவர்கள் ‘அவுலியாக்கள்’ எனப்படும் சூஃபி துறவிகளான இறைநேசர்கள்தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை.
காலம் –
தமிழ்மக்களின் மனங்களில் இன்றளவும் அருள்பாலித்து அரசாட்சி செய்யும் மஹான்களின் நினைவிடங்கள் என்னும் தர்கா ஷரீப்கள் நாடெங்கும் பல உள்ளது.கடல் காடு மலை என எங்கும் பரவி மக்களோடு கலந்துறவாடி இஸ்லாத்தின் கொள்கைகளை பரப்பிய இம்மஹான்களை நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
அந்த வரிசையில், சுமார் 900 ஆண்டுகளுக்குமுன் அரேபியாவிலிருந்து தீன்மார்கத்தை தமிழகத்தில் பரப்பவந்த ஹஜ்ரத் ஷேக் அலாவுத்தீன் ஒலியுல்லாஹ் நாயகம் அவர்கள் தனிச்சிறப்பானவர்கள். மேலும் இவர்கள் சிரியா நாட்டின் மாமன்னராய் இருந்து முடிதுறந்து தென்னிந்தியா வந்தடைந்து சோழ சாம்ராஜ்யத்தை செழிக்க செய்த ஹஜ்ரத் திருச்சி தப்லே ஆலம் பாதுஷா நாயகத்தின் காலத்தை சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

தர்கா அமைவிடம் –
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரி மன்னன் வாழ்ந்த மலையான பறம்பு மலை ‘பிரம்பு மலை’ என மருவி பின்னாளில் ‘பிரான் மலை’ என்றானது. சுமார் 2450 அடி உயரத்தில் நெடிதோங்கி நிற்கும் இம்மலையில்தான் ஹஜ்ரத் ஷேக் அலாவுதீன் ஆண்டகையின் திருச்சமாதி அமையப்பெற்றுள்ளது.
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் அமைந்துள்ள இம்மலை சங்ககால பக்தி இலக்கியங்களில் ‘கொடுங்குன்றம்’ என்று வழங்கப்படுகிறது. முக்கனிகளைத்தரும் பல மரங்களும் எக்காலமும் சுரந்துகொண்டே இருக்கும் தேன்சுவை சுனைகளும் இம்மலையில் காணப்படுவதை பண்டைய வரலாற்று நூல்களும் குறித்துள்ளன.
அற்புதங்கள் குடிகொண்ட இம்மலை தர்கா பல சமய மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு புண்ணிய ஸ்தலமாக இன்றளவும் விளங்குகிறது.
மலை தர்கா பயணம் –
நெடிதோங்கிய இம்மலைப்பயணம் சவால் நிறைந்ததாக இருக்குமென்பதால் பெரும்பாலும் அதிகாலையிலேயே பக்தர்கள் அவுலியாவின் அருளைநாடி மலை அடிவாரத்தை அடைகின்றனர் . கரடு முரடான மலைப்பாதையை கடந்து மலையுச்சியில் அமைந்திருக்கும் தர்காவை அடைய சுமார் 3 மணிநேரமாகும் . பாறைகளின்மேல் வரையப்பட்டிருக்கும் குறியீடுகளின் வழிகாட்டுதலோடு பயணத்தை தொடரும் பக்தர்கள் தேவையான அளவு உணவும் தண்ணீரும் தங்களோடு எடுத்துச்செல்கின்றனர். சிலமணிநேர பயணத்திற்குப்பின் தர்காவை அண்மித்துவிடுகிறோம். திறந்தவெளியாக அமைந்திருக்கும் தர்கா வளாகத்தில் பக்தர்கள் பயபக்தியுடன் உளூ-என்னும் அங்கசுத்தி செய்தபின்னரே தர்காவினுள் பிரவேசிக்கிறார்கள் .ஏனெனில் இறைநேசரை தரிசிக்கும்போது உடலும் மனமும் தூய்மையாய் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
கடுமையான மலையேற்றத்தின் களைப்பெல்லாம் ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா நாயகத்தின் அருள்வாசலில் நிற்கும்போது பஞ்சாக பறந்துபோகிறது. அருள்வேண்டி துவா என்னும் பிரார்த்தனையை முடித்து பரந்துவிரிந்த நிலங்களை மலையுச்சியிலிருந்து காணும்போது நம்மை வருதிச்செல்லும் குளிர்ந்த தென்றல் – வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரனுபவம்.

நேர்ச்சை விருந்து –
அங்கே இயன்றவர்கள் மலை தர்கா வளாகத்திலேயே தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி விருந்து படைத்து பரிமாறுகின்றனர். பல நோய்களுக்கு அருமருந்தாக அங்குள்ள சுனைநீரை மக்கள் எடுத்துச்செல்கின்றனர். இன்னும் பலர் அடிவாரத்தில் அமைந்துள்ள தர்கா பள்ளிவாசலில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கந்தூரி – விருந்து படைக்கின்றனர்.
இதுபோன்று ஆண்டு முழுவதும் பலர் குடும்பமாக வந்து தங்களது பதிலளிக்கப்பட்ட ப்ரார்தனைகளுக்காக ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா நாயகத்தின் தர்பாரில் கந்தூரி விருந்து படைத்து நன்றிசெலுத்தி செல்கிறார்கள்.
சந்தனக்கூடு உரூஸ் நிகழ்ச்சி –
ஆண்டுதோறும் ரபியுல் அவ்வல் பிறை 11 அன்று மாலை கொடியேற்றமும் அதைத்தொடர்ந்து பிறை 21-ல் ஆண்டகையின் திருச்சமாதியில் சந்தனம் பூசும் வைபவமும் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. அதுபோது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து இங்கே கூடுகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ், பலநூறு ஆண்டுகளுக்குமுன் தமிழத்திற்குவந்து தீன்பணி செய்து இறைவனோடு ஒன்றிய ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா நாயகத்தின் தர்பாரை தரிசித்து அவர்களின் அருளைப்பெறும் பாக்கியத்தை வல்லநாயன் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக.