தமிழகத்தின் ஆன்மீக அருட்தலங்கள் நிறைந்த நகரங்களுள் ‘பரங்கிப்பேட்டை’ தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாஸ்கோடகாமா கடல்நெடும்பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவுக்கும் இந்திய துணைகண்டத்துக்குமிடையே வழிகண்டுபிடித்த நாள்முதல் போர்த்துகீசியர் கூட்டம் கூட்டமாக கேரள கரையிலும் சோழமண்டலக் கரையிலும் வந்திறங்கினார்கள்.
அப்படி அவர்கள் தமிழக கடற்பகுதியில் வந்திறங்கிய இடம்தான் ‘மஹ்மூது பந்தர்’ என்று கி.பி. ஏழாம் நுாற்றாண்டிலிருந்து பிரசித்தி பெற்ற ‘பரங்கிப்பேட்டை’ எனும் இத்துறைமுகப்பட்டிணமாகும்.
‘Porto Novo’ என்று அழைக்கப்படும் ‘மஹ்மூது பந்தர்’ முகலாய ஆட்சிகாலத்தில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தது.
பரங்கியர் எனும் போர்த்துகீசியரின் வணிக மையமாக இவ்வூர் இருந்தமையால் இவ்வூர் ‘பரங்கிப்பேட்டை’ என்று பெயர்பெற்றது.(பேட்டை – சந்தை).
வெள்ளாற்றங்கரையோரம் அமைந்த எழில்கொஞ்சும் இந்நகரில் 360க்கும் மேற்பட்ட தர்காக்கள் எனும் நல்லடியார்களின் அடக்கவிடங்கள் உள்ளன.
கீழக்கரை ஹஜ்ரத் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் சீடரும், இன்று உலகெலாம் ஓதப்படும் கெளதுகள் நாயகம்-முஹ்யித்தீன் ஆண்டகை மெளலீது ஷரீஃபை இயற்றியவருமான ஹஜ்ரத் மஹ்மூது தீபி (ரலி) அவர்களின் அடக்கவிடம் இவ்வூரிலேதான் உள்ளது.
தமிழ்மொழியின் ஒப்பில்லா பேரிலக்கியம் – கருணை நபியின் காரணக்காவியம் ‘சீறாப்புராணம்’ எனும் பெருங்கவிதைத் திரட்டு இயற்றப்பட்டது இவ்வூரிலேதான்.
இன்னும் பல சிறப்புகள் பெற்றிருக்கும் இந்நகரின் புகழுக்கு புகழ் சேர்த்து, ‘மஹ்மூது பந்தர்’க்கு மணிமகுடமாய் விளங்குவது, அஸ்ஸஹாபே ரசூல் ஹஜ்ரத் சையிதினா உக்காஷா (ரலி) எனும் நபித்தோழரின் திருச்சமாதி என்று கூறினால் அது மிகையாகாது.
அஸ்ஸஹாபுல் பத்ரியீன் (நபிபெருமானார் (ஸல்) அவர்களுடன் பத்ரு போரில் கலந்துகொண்ட 313 வீரர்களுள் ஒருவரான) ஹஜ்ரத் உக்காஷா (ரலி) அவர்கள்தாம் அஹ்மது முஜ்தபா முஹம்மது முஸ்தஃபா ரஹ்மத்தன்லில் ஆலமீன் ராஹதன் ஆஷிகீன் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் ‘நுபுவ்வத்’ என்னும் நபித்துவ முத்திரையில் முத்தமிட்ட தனித்துவமிக்க சஹாபியாவார்கள்.
நபி பெருமானாரின் இறுதிப் பேருரையின் போது சுமார் 1,24,000 சஹாபா பெருமக்கள் உத்தம நபியின் உபதேசத்தை கேட்க குழுமியிருந்தார்கள்.
அக்கூட்டத்தில் 40 சஹாபிகள் ஹாஃபீஸ்களாகவும், 313 பத்ர் சஹாபாக்களும் இருந்தனர், மேலும் ‘முபஸ்ஸிரீன் பெல் ஜன்னா’ – தங்கள் ஜீவிதகாலத்திலேயே சுவர்க்கம் நிச்சயக்கப்பட்ட உன்னத நபித்தோழர்கள் 10 பேரும் (ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்கள் உட்பட) நிறைந்து இருந்தனர்.
பின்னர் நபிகளாரின் திருவாக்கிற்கிணங்க பல சஹாபிகள் சத்திய மார்க்கமான தீனுல் இஸ்லாத்தை பரப்ப பல்வேறு தேசங்களுக்கு பயணப்பட்டார்கள். அப்போது ஹஜ்ரத் சையிதினா உக்காஷா(ரலி) அவர்கள் தங்களின் சீடரான ஹஜ்ரத் சையித் சாஹிப் கன்ஜ்(ரஹ்) அவர்களோடு தென்னகம் வந்து குடிகொண்டு இஸ்லாமிய சன்மார்க்க ஜோதியை மக்களிடத்தில் ஏற்றிவைத்தார்கள்.
அகிலங்கள் அனைத்திற்கும் அருட்கொடையாய் இத்தரணியில் அவதரித்த அண்ணலெம்பெருமானாரின் மீது ஹஜ்ரத் சையிதினா உக்காஷா(ரலி) அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய நேசத்தையும், அதேபோல் நபிபெருமானார் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) மீது கொண்டிருந்த அளவிலா பாசத்தையும்,உச்சத்தின் உச்சமாக தன்னை அளவுகடந்து நேசித்த அருமைத்தோழரான ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களுக்கு நபிபெருமானார்(ஸல்) இதயங்கனிந்து தம்முடைய திருமேனியில் இறைவனால் பொக்கிஷமாய் அருளப்பட்ட நபித்துவ முத்திரையை வெளிப்படுத்தி அவர்களின் இதய தாபத்தினை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல்,
‘நலம் தரும் நாயனின் சுகம் நிறைந்த சுவர்க்கம் உமக்குண்டு’
என்று திருவாய் அருளி ஹஜ்ரத் அவர்களை ஆனந்த சாகரத்தில் மூழ்கடித்த வரலாற்றை கேள்வியுற்று உளமுருகி பேரானந்தக் கண்ணீர் சிந்தாத விழிகளே இல்லை என கூறலாம்.
‘மெஹ்ரே நுபுவ்வத்’ எனும் நபித்துவ முத்திரையை கண்ணாரக் கண்ட விழிகளையும் அதனை முத்தமிட்ட இதழ்களையும் தன்னுள் வைத்திருக்கும் உன்னதம் நிறைந்த இப்புனித பூமியில் சிரம் தாழ்த்தி முத்தமிடவும், தஜல்லியத்தான அவர்களின் ஆன்மசுவரூபத்தை அகவொளியால் காணவும் பல நுாற்றாண்டுகளாக பல்வேறு யோகிகளும், ஞானிகளும் பரங்கிப்பேட்டை திருநகர் காண வந்தனர், இன்றும் வந்துகொண்டிருக்கின்றனர்,அந்த வரிசையில் முக்கியமானவர்கள்,
தெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் ஹஜ்ரத் குத்புல் அக்தாப் ஃபர்துல் அஹ்பாப் சையிது சாதாத் ஹஜ்ரத் ஷாஹீல் ஹமீது நாயகம் அவர்கள் ஆவார்கள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் நாடிவந்து நின்ற நல்லடியாரின் வாசலில், நாமும்,தஞ்சமென நின்று நல்லருள்பெற நாயனருள்புரிவானாக.

தர்காவின் முக்கிய நாட்கள்– ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதம் பிறை 11 அன்று ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களின் உரூஸ்-கந்துாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
பரங்கிப்பேட்டையில் உள்ள முக்கிய ஜியாரத்கள் (நல்லடியார்களின் அடக்கஸ்தலங்கள்)
1. கண்டெடுத்த பள்ளி – ஹஜ்ரத் சையிதினா உக்காஷா (ரலி) அவர்களின் தர்கா,
2. ஷைக் பாபா ஃபக்ருத்தீன் மாலுமியார் அப்பா தர்கா,
3. கண்ணாடி அப்பா தர்கா – ஹஜ்ரத் முஹம்மது தீபி (ரலி) அவர்களின் தர்கா,
4. ஹாஃபிஸ் ஹஜ்ரத் மீர் சாஹிப் அப்பா தர்கா,
5. அரைக்காசு நாச்சியார் தர்கா – ஹஜ்ரத் குரைஷி பீவி அவர்களின் தர்கா
6. சையத் ஷாஹ் சாஹிப் தர்கா