நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும்.
சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள்.
சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று முடிவுசெய்திருப்பார்கள்.
ஆனால் இறைநேசம் தேடும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது அதிலும் தஸவுஃப் என்னும் ஏகத்துவ ஞானம் சற்று வித்தியாசமானது, நான் கூறப்போகும் செய்திகள் உங்களை ஞானக்கோட்டைக்கு அழைத்துச் செல்லாவிடினும் அதன் வாசல்படிகளிளாவது உங்கள் காலடிகளை எடுத்து வைக்க உதவும்.
கேளுங்கள்!
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் அல்லாஹ்வை பார்த்தேன் பின்பு அவனை வணங்கினேன் (ரஅய்தஹூதும்ம இபாதத்தஹூ).
மேலும் அவர்கள் கூறினார்கள், நான் இறைவனை அழகிய கோலத்திலே கண்டேன் (ரஅய்து ரப்பி ஃபீஅஹ்சனி சூரத்தின்).
நீங்கள் அல்லாஹ்வாகிய அவனை காண வேண்டும், அப்போதுதான் அவன் மீது வைக்கும் நேசம் சம்பூர்ணமாகும்.
ஏனெனில் நபிபெருமானாரின் மற்றொரு ஹதீஸ்,
எவன் ஒருவன் ஆண்டவனைக் காணவில்லையோ அவன் காஃபிர்.
மேலும்,
இறைவனின் சந்திப்பிலன்றி மூமினுக்கு நிம்மதியில்லை
என்றும் கூறியிருக்கிறார்கள்.
இறைவனை மனிதன் நேசிப்பது என்பது உண்மையில் அவனுடைய ஏவல் விலக்கல்களின் படி நடந்து அவனுக்கு கீழ்படிவது மட்டுந்தான் என்று அர்த்தப்படுத்தியுள்ளார்கள். இத்தகைய கருத்துடையவர்கள் உண்மையான சன்மார்க்கம் எது என்பதை அறியாதவர்களாவர்.
மெய் விசுவாசிகளைக் குறித்து இறைவன் திருமறையில்,
அவர்கள் அவனை நேசிக்கிறார்கள் அவன் அவர்களை நேசிக்கிறான் (5.54)
என்று கூறியுள்ளான்.
ஹலரத் ஹஸன் பஸரி(ரலி) அவர்கள்,
இறைவனை அறிந்தவன் அவனை நேசிக்கிறான், இவ்வுலகை அறிந்தவன் அதை வெறுக்கிறான்
என்று கூறியுள்ளார்கள்.
இந்த தத்துவத்தை இறைவனிடம் நாம் நேசம் பாராட்ட உபயோகித்து பார்த்தால் நமது அன்புக்கு உரிமையுடையவன் இறைவன் மட்டுமே தான் என்பதையும், யாரும் அவனை ஆராய்ந்து அறிய முயற்சிப்பதில்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.
மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சந்திப்பைப் பற்றி கூறியுள்ள ஹதீஸ் விசித்திரமாயுள்ளது.
நான் அல்லாஹ்வை மிஃகுராஜின் போது அழகிய இளமைப் பருவக் கோலமாக கண்டேன்,
இது ஹதீஸ்.
என்ற உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது.
இறைவனோ ஆணுக்கு பெண்ணாகவும் பெண்ணுக்கு ஆணாகவும் உள்ள பேரின்ப சூக்கும தத்துவம்.
அவனை சந்தித்தாலன்றி உங்களுக்கு நிம்மதியில்லை ஏனெனில்
இறைவனின் சந்திப்பிலேயன்றி சன்மார்க்க விசுவாசிக்கு நிம்மதியில்லை
என்ற ஹதீஸ் மெய்யானது.
இறைவனாகிய அவனுடைய சந்திப்புக்கு ஏங்கி தவித்த சூஃபிகளின் வார்த்தைகளை கேளுங்கள், நிச்சயம் இறைநேசப் பாதையில் ஈடேற்றமடைவீர்கள்.
ஆமின்! வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!