கீழ்கண்ட ஆதாரங்கள் ரமலான் மாதத்தின் 27ம் பிறை லைலத்துல் கத்ர் இரவு என்பதற்கு தக்க ஆதாரங்களாக இருக்கின்றன
புஹாரி -4470
நான் ‘லைத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணியமிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா?’ என்று ஸுனாபிஹி அவர்களிடம் கேட்க, அவர், ‘ஆம். நபி(ஸல்) அவர்களின் (பள்ளிவாசலின்) தொழுகை அழைப்பாளரான பிலால்(ரலி), ‘அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாள்களில் ஏழாவது இரவில் கிடைக்கும் என்று எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு “அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்” என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் “அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்” என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)” என்றார்கள்.
முஸ்லிம் 2176
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “லைலத்துல் கத்ர்” இரவு குறித்துக் கூறுகையில், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்” என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனது அறிவுக்கு எட்டியவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு இருபத்தேழாவது இரவேயாகும் (என்று உபை (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்) என்றே கருதுகிறேன்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு” எனும் இந்த வாசகத்தில்தான் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயம் தெரிவித்தார்கள். அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவரே இதை எனக்கு அறிவித்தார் என ஷுஅபா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்னு ஹிப்பான் 2547 / நஸாயீ 1605
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.
இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினோம்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.
இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது குடும்பத்தினைரையும், மனைவிகளையும், அழைத்து வர ஆளனுப்பினார்கள். அவர்கள் ஒன்று திரண்ட பின், சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்கு எங்களுக்கு இரவுத்தொழுகை நடத்தினார்கள்…
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
ஹாகிம் – 1608
நுஐம் பின் ஸியாத் (ரஹ்) கூறியதாவது:
நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியில் (ஒரு பள்ளிவாயிலின்) உரைமேடையில் நின்று கூறினார்கள்:
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
முஸ்லிம் – 1397
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி) அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் “அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள்.
இன்னும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலேயே லைலத்துல் கத்ர் இரவை 27ம் பிறையில் கொண்டாடி வருகிறோம். ரமலான் மாதம் முழுவதும் அதிகமான நற்செயல்கள் புரிவதைப்போல கடைசி பத்து இரவிலும், குறிப்பாக கடைசி பத்து ஒற்றைப்படை இரவிலும் இன்னும் 27ம் பிறையிலும் அதிகமதிகம் நற்செயல்கள் புரிய வல்ல இறைவன் கருணை புரிவானாக!
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன பிரார்த்தனை செய்து -கேட்க- வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள். (பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!) அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
தொகுப்பு – நெல்லிக்குப்பம் அப்துல் கரீம் காதிரி க்ஷிஸ்தி
Deprecated: stripos(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /var/www/vhosts/nagorennptrust.org/netsufi.com/wp-includes/functions.wp-scripts.php on line 133