நாகூர் கந்தூரி நிகழ்ச்சிகளின் விளக்கமும் வரலாற்றுப்பின்னணியும்

தெற்கிழக்காசியாவின் ஞான தீபம் ஹஜ்ரத் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்கா உலகப்பிரசித்தம் வாய்ந்தது.

வருடம்தோறும் நடைபெறும் நாகூர் ஆண்டகையின் கந்தூரி உரூஸ் பெருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன, மொழி, மத பாகுபாடுகளைக் கடந்து நிறைந்த பக்தர்கள் நாகூர் நகரில் கூடுகிறார்கள்.

இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் நாகூர் நாயகத்தின் கந்தூரியைக் காண திரளான மக்கள் வருவதை நம்மால் காணமுடிகிறது.


14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டகையின் மஜார் என்னும் புனித சமாதியின்மீது சந்தனம் பூசும் வைபவம் திகழ்கிறது.

  • நாகூர் கந்தூரி வைபவம் எப்போது எப்படி துவங்குகிறது?
  • கந்தூரி விழா நடைபெறும் 14 நாட்களும் நாகூர் தர்காவில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் யாவை?
  • கந்தூரி காலங்களில் நடைபெறும் பாரம்பரியமான சிறப்பு நிகழ்வுகள் என்னென்ன என்பதைப்பற்றி விரிவாக பட்டியலிடுகிறது இத்தொகுப்பு.

நாகூர் கந்தூரி நிகழ்ச்சிகளின் விளக்கமும் வரலாற்றுப்பின்னணியும்

நாகூர் ஹஜ்ரத் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது ஆண்டகையின் கந்தூரி விழாவிற்கு 40 நாள் முன் சாந்து (கந்தூரி விழாவிற்காக வெள்ளையடிக்கும்) வேலைகள் தொடங்கும் விழா நடைபெறும்.
இந்நிகழ்வே நாகூர் கந்தூரியின் துவக்க விழாவாக கருதப்படுகிறது.

கொடி ஏற்றுதல்

ஜமாதுல் அவ்வல் பிறை 26 அன்று கொடி மரம் (பாய் மரம்) ஏற்றுதல் நடை பெரும்.


கொடி ஏற்றும் நிகழ்விற்கு 5 நாட்கள் முன்னதாக சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு கொடி கொண்டு வந்து துஆ ஓதப்படும்.

ஜமாதுல் ஆகிர் பிறை 1 பிற்பகலில், நாகை முஸ்லீம் ஜமாதினரால் சிங்கப்பூரிலிருந்து வந்த கொடி உட்பட ஐந்து கொடிகளையும் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து சர்வ மத மக்களால் நாகை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு நாகூர் தர்காவில் 5 மினாராக்களில் திருக்கொடிகள் ஏற்றப்படும்.

ஜமாதுல் ஆகிர் பிறை 8: நாகூர் தர்கா அலங்கார வாசலில் வான வேடிக்கை நடைபெறும்.

ஜமாதுல் ஆகிர் பிறை9: நாகூர் ஆண்டகையைக்காண மூன்று நாள் உண்ணா நோன்பு (தவம்) இருக்கும் ஃபக்கிர்களின் சர்குருவை பீர் வைக்குதல்.

நாகூர் நாயகம் இவ்வுலகை பிரிந்த சில நாட்களில் அவர்களின் சீடரான பக்கீர் ஒருவர் தன்னுடைய சர்குருவைக்கான நாகூருக்கு வந்தார். அப்பொழுது நாகூர் நாயகம் இறப்பெய்திய செய்தியைக்கேட்டு மிகவும் வருந்தினார். வேதனையோடு உறங்கிய அச்சீடரின் கனவில் தோன்றிய காதிர் வலி நாயகம், சீடரின் மனதைத்தேற்றி அவரை 3 நாட்கள் தன்னுடைய மஜார் அருகில் தவமிருக்கப் பணித்தார்கள். சீடரும் அவ்வாறே செய்து தம் குருவின் நல்லருளைப்பெற்றார். இதன் காரணமாகவே இன்றும் கந்தூரி நாட்களில் பக்கீர்மார்களில் ஒருவரை 3 நாட்கள் தவமிருக்கச்செய்யும் வழக்கம் தொடர்கிறது.

ஜமாதுல் ஆகிர்-பிறை 10 இரவு 8 மணி அளவில் நாகையிலிருந்து சந்தன கூடு புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வரும் போது சாலையின் இரு புறமும் ஜாதி மத பேதம் கடந்து பக்தர்கள் அனைவரும் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி சந்தனக்கூடு மேல் பூ வீசுவார்கள்.
மறுநாள் அதிகாலை 4.30 மணி அளவில்

காதிர் வலி நாயகத்தின் புனிதமிக்க மஜார் என்னும் திருச்சமாதியின் மீது சந்தனம் பூசப்படும்.


ஜமாதுல் ஆகிர் -11 மாலை துஆ ஓதி பீர் கடற்கரைக்கு ஏகுதல் நிகழ்வு நடைபெறும்.


ஜமாதுல் ஆகிர் -12 அதிகாலை சுபுஹு தொழுகை முடிந்த பின் ராத்தீப் துஆ பாத்திஹா நடைபெரும்.


ஜமாதுல் ஆகிர் -14 இரவு 8.30 மணிக்கு குர்ஆன் ஹதியா செய்து புனிதக்கொடி இறக்கப்படும்.


பிறை-1 முதல் பிறை-14 வரை குர் ஆன் ஓதுதல் நடைபெரும் .


நாகூர் ஆண்டகையின் கந்தூரி நடைபெறும் அந்த 14 நாள்களிலும் தினமும் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வெடியோசை எழுப்பப்படும்.


அதிகாலையில் ஐந்து மினாராகளிலும் கொடி ஏற்றுதல் நடைபெரும்.
மாலையில் ஐந்து மினாராக்களில் கொடி இறக்கி கொடி மாற்றுதல் நிகழ்வு நடைபெறும்.


ஆண்டகையின் தலை மாட்டில் சந்தனம் அரைக்க பெரிய இடம் உள்ளது.
அங்கு 7 நபர்களால் தூய எண்ணத்துடன், பிறை 2 முதல் பிறை 9 வரை 7 நாள் சந்தனக்கட்டைகளை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படும்.


கந்தூரி நாட்களில் தர்கா ஷரீப் உள்ளே ஜமா ஃபக்கீர்மார்களின் ஐந்து குழுக்களும் அவர்களின் சர்குருவும் தங்கி இருப்பார்கள்.


குறிப்பாக

1.பானுவாஜமா

2.பீர் ஜமா

3.ரிஃபாய் ஜமா

4.மலங்கு ஜமா

5.ஜலாலியா ஜமா,

ஆகிய ஜமா ஃபக்கீர்மார்கள் நாகூர் ஆண்டகையின் கொடி ஏற்றுதல் நிகழ்வு முதல் 40 நாட்கள் தர்காவில் தங்கியிருப்பார்கள்.

இது ஹஜ்ரத் காதிர் வலி நாயகத்தின் குமாரர் அண்ணல் யூசுஃப் சாஹிப் ஆண்டகையின் காலத்திலிருந்து நடைபெறும் பாரம்பரியமான நிகழ்வாகும்.

local_offerevent_note July 25, 2021

account_box admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *