தெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் நானிலம் போற்றிடும் நாகூரில் கொலுவீற்று ஆன்மீக அரசாலும் நம் கருணைக்கடல் கஞ்சஷவாயி காதிர்ஒலி நாயகத்தின் கீர்த்திமிக்க தர்கா எனும் திருப்பள்ளிக்கோட்டையின் வனப்பையும் அமைப்பையும்போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லையென்று உலகம் சுற்றிய அறிஞர்கள்பலர் புகழ்ந்திருக்கின்றனர்.

அனுதினமும் அண்ணலரின் வாசலில் ஆயிரக்கணக்கானோர் சாதிசமய பேதமின்றி உயர்வு தாழ்வு என்ற பிரிவுமின்றி தங்களது மனம்போல் அருள்பெற்று செல்லும் ஆண்டகையின் தர்கா வளாகம்,
1. வடக்கே தலைமாட்டு வாசல்,
2. மேற்கே அலங்கார வாசல்,
3. தெற்கே கால்மாட்டு வாசல்,
4. கிழக்கே கிழக்கு வாசல்
என்ற நான்கு வாயில்களைக்கொண்டு சுமார் 1,94,790 சதுர அடியில் ஒரு மகா சக்கரவர்த்தியின் அரண்மனைபோல் கம்பீரத்தோற்றத்தோடு காட்சியளிக்கிறது.
நாகூர் ஆண்டவர்கள் கால கதியடைந்து நூற்றைம்பது வருடங்களுக்கு பின்னர் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாப் சிங், குழந்தை வரம் கேட்டு நாகூர் தர்பாரிலே வந்து நின்றார்-அடுத்த வருடமே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னரால் 31 அடி உயரத்தில் வானுயர கட்டப்பட்ட மனோரா பெரிய மனோரா என்று அழைக்கபடுகிறது.
தர்கா வளாகத்தின் தென் மேற்கில் அமைந்திருக்கும் சாகிபு மனோரா ஆண்டவர்களின் பேரரும் சின்ன எஜமான் செய்யத் யூசுப் நாயகத்தின் மூன்றாவது மைந்தருமான சுல்தான் கபீர் நாயகத்தின் காலத்திலேயே கட்டப்பட்டதாகும்.
செஞ்சியில் வாழ்ந்த புகழ் மிக்க வர்த்தகர் இபுராஹிம்கான் என்பவர் நேர்ச்சை நிறைவேறியதின் காரணமாக இதனை கட்டுவித்தார். அவரது காரியதரிசிகளாக மீரான் ராவுத்தர், மதாறு ராவுத்தர் என்று இரு பெருமக்கள் முன்னின்று இந்த மனோராவை உருவாக்கினார்.
நாகூர் ஆண்டகை அவர்கள் மறைந்தவுடன் பீர் மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் வைத்து தொழுகை நடத்தப்பட்டது.
நாகூர் தர்காவில் அமைந்துள்ள யா ஹுசைன் பள்ளி என்ற இடத்தில் தான் ஹஜரத் பாதுஷா நாயகம் மறைந்த பின் அவர்களது புனித உடல் குளிப்பாட்டப்பட்டது , இந்த தண்ணீர் ஓடி விழுந்த இடமே இன்று தர்கா குளமாக உள்ளது.
நாகூர் ஆண்டவர்கள் மறைந்த பின் முதன் முதலில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள்தான் மேலே ஓலை மட்டையால் கூரை வேய்ந்து, மஜாரை ஒழுங்குபடுத்தி சுற்றுச்சுவர் எழுப்பினார்கள்.
முதுபக் ஷரீப் – ஆண்டகையின் மருமகள் வாழ்ந்த இடம் ஆகும். இங்கு அவர்களின் கால்பாத அடையாளம் உள்ளது.இது பெண்கள் வேண்டுதலுக்காக தங்கும் தனி இடமாகும்.
நாகூர் காதிர் ஒலி நாயகத்தின் சன்னதியின் மேல் ஆண்டகை அணிந்த நீல கல் மோதிரம் பதிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டகையின் சன்னதி திறந்த உடன் காலையிலும், மாலையிலும் வெள்ளி சட்டியில் ஆடவர் ஒருவரால் சாம்பிராணி போடப்படும்.
மகனார், சின்ன ஆண்டவர், மருமகள் அம்மா சாஹிபா ஆகியோர் வாசலில் தினமும் விளக்கு ஏற்றிய பிறகுதான் சன்னதிகள் திறக்கப்படும்.
சன்னதி திறக்கும் முன் 5 நிமிடம் முன்பாக நான்கு ஆடவர்கள் நடுமன்றத்தில் அசா கோல் கையில் பிடித்துவெள்ளை ஆடை அணிந்து சிப்பாய்களாக நிற்பார்கள்.
ஆண்டகையின் கால் பாதம் வைக்கப்பட்டுள்ள தங்க பெட்டி ஜாதி, மதம், பேதம் இன்றி நாடிவரும் யாத்திரிக பெருமக்களுக்கு ஆசீர்வாதமாக தலையின் மீது வைக்காப்படும்.
காதிர் ஒலி நாயகத்தின் சன்னதியில் உள்ளே ஆண்கள் மட்டும் செல்ல முடியும்.
நாகூர் காதிர் ஒலி நாயகத்தின் சன்னதிதிறந்த 15 நிமிடத்தில் முன் சன்னதியில் உள்ள, தண்ணீர் நிறைந்திருக்கும் கண்ணாடி குவளையில் ஒரு ஸ்பூன் மட்டும் தேங்காய் எண்ணெய் ஊற்றப்பட்டு அதில் ஏற்றப்படும் விளக்கு சுமார் 3 மணி எரியும்.
ஆண்டகையின் சன்னதி திறந்திருக்கும் நேரம் அதிகாலை 4.20 முதல் 7.00 மணி வரை.மாலை 6.00 மணி முதல் இரவு 10.00மனி வரை,அதாவது சூரியன் உதிக்கும் முன்பும் மறைத்தவுடனும் சன்னதி திறக்கப்படும்.
வெள்ளிக்கிழமை மட்டும் பகலில் சன்னதி திறக்கப்படும் – (காலை 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை).