இறைவணக்கம் (இபாதத்) என்பது ஒரு கைத்தொழிலாகும் இத்தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களே தெய்வ சமீபத்துவமும் சத்தியமும் வாய்ந்த அவுலியா அப்தால்களாவர்.
நபிமார்கள் தோன்றி மக்களுக்கு நேர்வழி காட்டிய காலம் முடிவு பெற்றுவிட்டது.
எனினும் கியாமத் நாள் வரையும் உலகினர்க்கு வழிகாட்டப்பட வேண்டிய அவசியம் இருந்து கொண்டிருப்பதால்தான் இன்றும் இம்மண் மீது நாற்பது நாயகங்கள் (அப்தால்கள்) இருந்து கொண்டு தீர்க்கதரிசிகள் ஏற்றி வைத்த ஞானஜோதியை அணையாமல் துாண்டி மக்களை சன்மார்க்கத்தின் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
குருநாதர் ஆற்றிய அம்மகத்தான சேவையை அவர்களின் வாரிசுகளான சிரேஷ்ட சிஷ்யர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வாரிசுகள் ஒவ்வொருவர் இதயத்துள்ளும் ஏதேனுமொரு தீர்க்கதரிசியின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கருத்துடன்தான் ‘உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்’ என்று நபிபெருமான்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.