சங்கைக்குரிய முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் மறைந்த பின்னர் அவர்களின் புத்திரர்களும் சீடர்களும் பிரதிநிதிகளான கலிஃபாக்களும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காதிரியா ஞான மார்க்கத்தையும் அதன் திக்ரு பயிற்சி முறைகளையும் மக்களுக்கு உபதேசித்து இறைவனை நெருங்கும் பாதையில் மக்களை அழைத்தேகினார்கள்.
ஆண்டகை அவர்களுடைய ஜீவியகாலத்திலேயே ஏமன் நாட்டிலும், ஆப்ரிக்காவில் வடகரையில் உள்ள ஃபெஸ் நகரிலும், சிரியாவிலும், மேற்கே மொரொக்கோவிலும் காதிரிய்யா தரீக்காவை, ஷெய்கு அலிபின் ஹத்தாத், ஷெய்கு அபூபக்கர் அப்துல் அஜீஸ், ஷெய்கு அபூ அப்துல்லாஹில் பதைஹி போன்ற பெரியோர்கள் கொண்டு சென்றார்கள்.
எகிப்திலும்,துானிஸ்,திரிப்போலி முதலிய நாடுகளிலும், சிறிய ஆசியா, கான்ஸ்டான்டினோபில் தவிர மக்காவிலும் மதினாவிலும் காதிரியா ஞானவழிப்பாதை மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் சீனாவில் உள்ள யூனான் மாநிலத்திலும் குருமார்கள் தைக்கா என்னும் திக்ரு தியான மடங்களை நிறுவினார்கள்.
ஷெய்கு முஹம்மது கௌதுஜீலானி என்ற பெயருடைய ஆண்டகையின் பேரர்தான் காதிரியா தரீக்காவை முதல்முதலாக இந்தியாவிற்கு கொண்டுவந்தார்கள்.
டெல்லியில் அரசோச்சிய சுல்தான் சிக்கந்தர்லோடி இவர்கள்தம் சீடர் ஆவார்.
ஷாஜகானுடைய ஆட்சியில் இந்தியா வந்த ஷெய்கு அபுல் முஅலி காதிரியும், ஹலரத் மியான்மீரும் பஞ்சாபில் தரீக்காவை பரப்பினார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் ராம்பூர், கக்கோரி, ஆக்ரா, அலஹாபாத், ஜான்பூர் ஆகிய ஊர்களிலும், பீகாரில் முனாயிர், புல்லாரி ஷரீப் போன்ற இடங்களிலும் காதிரியா குருமார்கள் பிரபலமடைந்தனர்.
காஷ்மீரில் ஷெய்கு புல்லாஷா காதிரி மற்றும் வங்காலத்தில் ஷெய்கு சிகாபுத்தீன் சுஹரவர்தியும் காதிரியா ஞானவழியை பிரபலமடைய செய்தார்கள்.
தமிழகத்தை பொருத்தவரை நாகூரில் அடங்கியுள்ள ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் சுற்றிவந்து தீனுல் இஸ்லாத்தையும் காதிரியா ஞானவழியையும் தழைக்கச் செய்தார்கள்.
தமிழகத்தின் நாளாதிசைகளிலும் நடந்து சுற்றிவந்து மக்களுக்கு ஞான தீட்சை அளித்தார்கள்.காயல்பதியில் காமில் சுலைமான் காதிரி, கோட்டைபட்டினம் இராவுத்தர் அப்பா, திருமங்களம் மௌலா அபுபக்கர் ஒலியுல்லா ஆகியோர் பிரபலமடைந்தனர்.
கீழக்கரையில் அடக்கமாகியுள்ள நாயக நேசர் சதக்கத்துல்லா காதிரி அவர்கள் இயற்றிய ‘யா குத்பா’ பாமாலைதான் இன்றும் உலகின் பலபகுதிகளிலும் பக்தியுடன் ஓதப்பட்டு வருகிறது.
மகான் ஸதக்கத்துல்லா அவர்களின் சீடர்களான ஷெய்கு மஹ்மூது தீபி அவர்கள் ஆண்டகையின் மீது முஹ்யித்தீன் மௌலீது ஷரீஃபும், நுாஹூ லெப்பை ஆலிம் ‘வேதப்புராணம்’ என்ற ஞான நுாலையும் ஆக்கியுள்ளனர்.
புகாராவிலிருந்து கேரளம் மஞ்சேரிக்கு வந்த மகான் மஹ்துாம் ஜகான்கஸ்த் கேரளாவிலும் மற்றும் கடையநல்லுார், மதுரை நகரங்களிலும், பின்னர் திருவாரூரில் தங்கியும் காதிரியா தரீக்காவை பரப்பினார்கள்.
மகான் ஸதக்கத்துல்லாவின் பேரர் உமர் ஒலியுல்லா பாடிய கஸீதாவில் ‘இலாஹி அன்த துல்ஜூதி.. இறைவா நீ கொடைவள்ளல், தாஹா நபி அவர்கள் கொடையின் ஊற்று, முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களோ உன்னை நாடிவரும் நேசர்களுக்கு ஜூதி மலையைப் போன்றவர்கள்’ என்று பாடியுள்ளார்கள்.
காயல்பட்டினத்தில் இன்றும் நின்றிலங்கும் மஹலரா காதிரியா தரீக்காவின் அற்புத சின்னமாக விளங்குகிறது. அங்கும் மேலப்பாளையத்திலும் ஆண்டகையின் வழித்தோன்றல்களான ஸாதாத்துகள் பலரும் குடியேறி திருமணம் புரிந்து சந்ததிகளை ஈன்று காதிரியா ஞான வழியையும் பரவச்செய்துள்ளனர். இப்பகுதிகளில் ஆண்டகையின் சந்ததியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.