என்று நபிபெருமானார்(ஸல்) அவர்கள் இதயம் குளிர்ந்த ’ஹிந்த்’ என்று அறியப்பட்ட இந்தியத் திருநாட்டை காண வேண்டும் என்று கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் விரும்பினார்கள்.
அப்படி நினைத்த சில மணித்துளிகளில் இந்துஸ்தானத்தின் மேற்கு கடற்கரையோரத்தை கடந்து பொதிகை மலையின் குன்றுகளில் தான் நிற்க கண்டார்கள்.
அப்போது ‘முஹ்யித்தீனே இங்கே வாரும்’ என்று ஒரு ஆளரவமற்ற திசையிலிருந்து குரல் வரவே, அரபி, ஃபார்ஸி ஆகிய மொழிகளைத் தவிர இந்த இந்திய மக்கள் பேசுகின்ற மொழி ஒன்றும் தன்னால் இயல்பாக புரிந்து கொள்ள முடிவதை எண்ணி அவர்கள் அதிசயித்து, தன் பார்வையை குரல் வந்த இடம்நோக்கி திருப்பினார்கள்.
அங்கு ஒரு முதிய மனிதர் எலும்பும் தோலுமாக கிடந்தார்.
ஆம், ஆதிமனிதர் ஆதம் தோன்றிய இந்த மண்ணில் யுகாந்திர காலமாக ஞானம் உலவி வந்த இந்த இந்தியப் புனித பூமியில் ‘தீன்’ (சன்மார்க்கம்) குற்றுயிரும் குலையுயிருமாக சாய்ந்து கிடந்தது.துன்புற்றவரின் துயர் துடைக்கும் அண்ணலர் அவர்கள் அன்புகொண்டு அம்முதியவரை அணைத்து துாக்கி, ‘முதியவரே தாங்கள் யார்? என்னை ஏன் ‘முஹ்யித்தீன்’ என்று அழைத்தீர்?’ என வினவினார்கள்.
‘அன்பரே, என் பெயர் அகத்தீசன், ஆதிசித்தன் சிவபெருமானின் சீடன், காலா காலமும் ஈசனின் பண்புகளை மனிதர்களின் அகங்களில் உயிர்ப்பிக்கச் செய்யும் உம்மை ‘முஹ்யித்தீன்’ என்று அழைப்பதற்காகவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இம்மலைச் சரிவில் நான் உருவனாகவும், அருவனாகவும் திரிந்து வருகிறேன்’
என்று கூறி அருகிலமைந்த மண்டபத்திற்குள் இளைஞரான முஹ்யித்தீன் ஆண்டகையை அழைத்தேகினார் அகத்தீஸர்.
அங்கே தத்துவ விவாதங்களிலே ஈடுபட்டிருந்த அறிஞர் பெருமக்கள், கௌதுகள் நாயகத்தையும் அகத்தீஸரையும் கண்டு, தங்கள் சர்ச்சைகளை விட்டுவிட்டு மெளனித்தார்கள்.அப்போது அவ்வறிஞர் கூட்டத்திலே அகத்தீஸர் பேசினார்,
‘அலோப நிஷத்தில் இறைவனின் இறுதி துாதுவர் ‘முகம்மத்’ என்று வர்ணிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?ரிக் வேதத்தில் முஹம்மத் என்ற தீர்க்கதரிசி பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது பயணம் செய்து வருவார், அவருடைய நாமம் ‘புகழுக்குரியது’ என்று கூறப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா?இன்றைக்கு ஐந்து நுாற்றாண்டுகட்கு முன்னர் அரேபிய பாலை நிலத்திலே தோன்றிய அவருடைய திருக்கரத்தில்தான் இந்த அடியேனுடைய மோட்ச லாபம் இருக்கிறது. இதோ இந்த இளைஞர் யார் தெரியுமா? இவர் உலகின் மதங்களைத்தையும் புதுப்பித்து உயிரூட்ட வந்தவர், முகம்மத் எம்பெருமானாரின் பேரர். ’முஹ்யித்தீன்’ என்பது இவருக்கு இறைவன் அளித்திருக்கும் திருநாமம்.’
என்று கூறியதும் அங்கு கூடியிருந்த அனைவருடைய பார்வையும், அண்ணலரை நோக்கி திரும்பின.
அருளொளி பரப்பும் நிலா முகத்தை அவர்கள் பார்த்துக் கொண்டே நின்றனர்.அண்ணலர் முஹ்யித்தீன் இப்போது கூட்டத்தாரை நிமிர்ந்து பார்த்தார்கள். அவர்கள் பார்வையிலிருந்து புறப்பட்ட ஒளிவீச்சு கூட்டத்தாரின் தத்துவ குழப்பங்களுக்கு முடிவுகட்டி அவர்களின் உள்ளங்களிலே தெளிவைத் தந்தது.
அப்போது கௌதுகள் நாயகம் அவர்கள் திருவாய் திறந்து பாடலொன்றைப் படித்தார்கள்,
’’எங்கும் புகழோங்கிய எனது நாமம் அப்துல் காதிர் சம்பூர்ண ஞான அம்சமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எனது அருமைப் பாட்டனார் ஆதம் (அலை) உண்டாவதற்கு முன்பே இறைவனின் கிருபைக் கடலிலே என் உள்ளமை உண்டாகியிருந்ததுஎன் (ஸிர்ராகிய) ரகசியப் பொருள் நான் வெளியாகும் முன்பிருந்தே உலகெல்லாம் சென்று கொண்டிருந்தது’’
அருள்நிறைந்த அப்பாடலைக் கேட்டு அங்கே கூடியிருந்த அறிஞர்கள் அனைவரும் அண்ணலரிடம் நம்பிக்கையெனும் விழிப்பையேற்றுக் கொண்டார்கள்.
தென் தமிழகத்தின் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள ‘பொட்டல்புதுார்’ எனும் ஊரில், கௌதுகள் நாயகம் அவர்கள் வந்ததாக ஒரு மண்டபமும் அவர்கள் அங்கே சில காலம் தங்கி தவம் புரிந்ததாக மண்டபத்தின் உள்ளே நினைவிடம் ஒன்றும் இன்றளவும் உள்ளது.
மேலும் ’கௌதுல் அஃலமே’ குற்றாளம் என்றானது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் கெளதுகள் நாயகம் விஜயம் செய்ததாக தமிழ்நாட்டில் சிற்சில இடங்களில் பள்ளிகளும் நினைவிடங்களும் உள்ளது.
எனவே தவராஜ சீலர் கௌதுகள் நாயகம் அவர்கள் ‘முஹ்யித்தீன்’ என்று காரணப்பெயர் பெற்ற தமிழ் நாடும் அதில் வாழும் தமிழ்பேசும் நன்மக்களும் ஆண்டகையை கொண்டாடுவதில் ஆச்சர்யமேதுமில்லை.
நுாலுக்கு நன்றி –
- மெய்ஞ்ஞான ஜோதி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) மற்றும்
- பாக்தாத்தின் இராஜரிஷி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)
ஆசிரியர் – அஷ்ஷைக் மு.அ.ஹைதர் அலீ யகீனுல்லாஷா கலீஃபத்துல் காதிரி ஷத்தாரி சிஷ்தி சர்கலீஃபா ரிஃபாயி வெளியீடு – மும்தாஜ் பதிப்பகம்