நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது!
இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது!
அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் (ரலி) ஆண்டகை அவர்கள் ஆற்றிய மூன்றாண்டுகால கடுந்தவத்தில்,முதல் ஆண்டு சொர்ப்ப உணவும் நீரும் அருந்தினார்கள்!இரண்டாம் ஆண்டில் தண்ணீர் மட்டுமே அவர்களின் உணவாக அமைந்தது! மூன்றாவது ஆண்டு முழுவதும் (அந்த ஆண்டவன் மிகப்பெரியோன்!) உணவு புசிக்காமல் நீர் அருந்தாமல் ஈராக் தேசத்து கானகங்களில் கடுந்தவம் புரிந்தார்கள்!
ஆக இந்த நோன்பு என்னும் பசித்திருத்தலென்பது ஒரு ஞானப்பயிற்சி.சூக்கும ஆத்தும உடல்களை தட்டி எழுப்பி மேலிடவைக்கும் ஒர் அற்புதமான ஞானக்கலை”!
ஓர் ஆங்கில நூலில் புத்தரை எலும்பும் தோலுமாய் வரைந்து ‘இவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்’ என்பதைப்போல் எழுதியுள்ளனர்!
ஆம்,அது சரிதான்.ஸ்தூலத்தை வதம் செய்தால் தான் சூக்குமம் கிட்டும்!
ஆனால் இன்றைக்கு நோன்பு என்னும் போர்வையில் மறைந்துகொண்டு மனிதர்கள் புரியும் காரியங்கள் நகைப்பைத்தருகின்றன!
மாலை நேரம்வரை தாங்குமளவுக்கு விடியும்முன் வயிறுமுட்ட திண்றுவிட்டு உறங்கிவிடுகிறார்கள்!இதுதான் இன்றைய பெரும்பாலானோரின் நிலையாய் உள்ளது!
இந்த நோன்பை நான் குறைகூறவில்லை!
ஏனெனில் இறைவனும் அவனுடைய திருத்தூதருமான நம் உயிருக்கும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனித குலத்திற்கு இட்ட கட்டளைகளை ஏற்று நடத்துவதென்பதே மிகுந்த நன்மைக்குறிய ஒன்றாகும்! அதற்குப்பின்தான் அதிலுள்ள நிறைகுறைகள் யாவும்!
ஆக ஷரீயத் என்னும் சட்டதிட்டங்களை முடிந்தவரை பேணி நடந்துகொள்ளுங்கள்! அதனுள் பொதிந்திருக்கும் தத்துவார்த்த விளக்கங்களையும் புரிந்துகொள்ள முயலுங்கள்.
~ ஞான மஹான் ஹைதர் அலி யகீனுல்லாஷாஹ் (ரலி)