Panruti

ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா

அஸ்ஸலாமு அலைக்கும்,

பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது.

இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண தர்காவிற்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் மாதம் பிறை 24-லிருந்து கடைசிப் பிறை நாள் வரை ஆண்டகையின் கந்தூரி-உரூஸ்-சந்தனக்கூடு வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கந்தூரி நாட்களில் பண்ருட்டியை சூழ்ந்த பல்வேறு கிராமங்களிலிருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் நிறைந்த பக்தர்கள் திரண்டு வந்து தர்காவில் குழுமுகின்றனர்.

வாருங்கள் தர்காவில் அடக்கமாகியுள்ள மகானைப்பற்றி தெரிந்துகொள்வோம்…

இன்றைக்கு சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் நாகூர் காதிர்வலி பாதுஷா நாயகத்தோடு தமிழகம் வந்தடைந்த நானூற்றி நான்கு ஃபக்கீர்களில் அண்ணல் நூர் முஹம்மது ஷா அவ்லியாவும் ஒருவராவார்கள்.

நாகூர் ஆண்டகையின் மறைவுக்குப்பின்னர் மார்க்கப் பிரச்சார யாத்திரை மேற்கொண்ட நாகூர் நாயகத்தின் சீடர்களான பான்வா ஃபக்கீர்கள், அண்ணல் நூர் முஹம்மது ஷா அவர்களை தங்கள் குழுவின் தலைவராக ஏற்று நாகூரை நீங்கி வடக்குநோக்கி பயணப்பட்டு திருவதிகை நகரை வந்தடைந்தார்கள்.

‘ஃபக்கீர்கள்’ என்று கூறப்படும் தெய்வீக ஞானிகளுக்கே உரிய குரலொலியில்’ஹோஷ் பர் தம் நஜர் பர் கதம்’ – ‘உன்னில் உன் மூச்சை அடக்கு! உன் இரு பார்வையையும் உன் பாதத்தில் பதித்திடு!’ என்று உரக்க மொழிந்தவர்களாக ஆண்டகை அவர்களும் அவர்களின் ‘பான்வா’ ஜமா ஃபக்கீர் திருக்கூட்டத்தினரும் பண்ணுருட்டி கிராமத்தில் (அக்காலத்தில் திருவதிகை நகரமாகவும் பண்ருட்டி கிராமமாகவும் இருந்தது) நுழைந்தார்கள். அருகில் இருந்த தென்னந்தோப்பில் தங்கி மக்களுக்கு நல்லுபதேசம் செய்யத்தொடங்கினார்கள்.

தொண்டை மண்டலத்தில் கடும்பஞ்சம் நிலவியபோது, விஜயநகர மன்னரான கிருஷ்ணப்பர் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா ஆண்டகையிடம் முறையிட்டு வேண்டினார். அப்போது மன்னருக்கு ‘சிதம்பர இரகசியத்தை’ அறிவித்து நாட்டில் நிலவிய பஞ்சத்தை அவ்லியா அவர்கள் போக்கினார்கள்.

பண்ருட்டி நகரில் அண்ணல் நூர் முஹம்மது ஷா அவ்லியா அவர்களை சந்தித்ததன்பின் மாமன்னர் சிவாஜி இஸ்லாமிய மதத்தின் மீது தான்கொண்டிருந்த வெறுப்பை மாற்றிக்கொண்டார்.

ஜின்,தேவ,பூதகணங்களை வழிபட்டு வந்த பண்ருட்டி கிராம மக்களை நல்வழிப்படுத்த, அவ்வூரில் அமைந்த திரௌபதி கோவிலில் உள்ள தேவதையை மக்கள் கண்முன்னே அழைத்து பேசி இஸ்லாமிய சன்மார்கத்தின் உண்மையையும் ஞானமார்கத்தின் வலிமையையும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார்கள்.

அக்காலத்தில் இந்துசமய மக்களிடம் வழக்கத்திலிருந்த ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறுதுல் என்ற கொடிய வழக்கத்தை எதிர்த்துநின்று, தீயில் கருகி இறக்கவிருந்த ஓர் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றி இறைவனின் திருநாமத்தால் மரித்த அவள் கணவனையும் உயிர்பெறச்செய்து சத்திய தீன் மார்க்கத்தை மக்கள் தாங்களே முன்வந்து ஏற்கச் செய்தார்கள் மகானவர்கள்.

ஆண்டகையின் அருளால் காப்பாற்றப்பட்ட இந்தத்தம்பதியினர் ஆண்டகையின் அந்திம காலம் வரை அவர்களுக்கு பணிவிடை செய்து ‘செய்யது அலி – பாத்திமா’ வாக வாழ்ந்து மறைந்தார்கள்.

இவர்களின் அடக்கவிடத்தை இன்றும் தர்கா வளாகத்தில் நாம் காணலாம்.

மேலும் அண்ணல் நூர் முஹம்மது ஷா அவ்லியா அவர்கள் தங்களது குருநாதரான ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது ஆண்டகையைப்போல் பேரின்பத்தை நாடி திருமணம் செய்துகொள்ளாமல் தீன்பணிசெய்து வாழ்ந்தார்கள்.

கருணைக்கடல் நாகூர் காதிர்வலி ஆண்டகையின் பாதங்களில் குமிழிலில்லா பாதக்குறடு (காலணி) இருந்து வந்தது. வார்,குமிழ் எதுவுமில்லாமல் அது அவர்களது பாதத்தில் ஒட்டிக்கொண்டு அவர்கள் உலகை வலம் வந்தபோதெல்லாம் உடன் வந்தது.

அதேபோல் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா அவ்லியா அவர்கள் ‘ஃபனா ஃபிஷெய்க்’ என்ற ஆன்மீக நிலையில் அவர்களின் குருநாதரான கருணைக்கடல் நாகூர் காதிர்வலி ஆண்டகையின் குமிழிலில்லா பாதக்குறடுபோல் அவர்களது பாதத்திலிருந்தும் குமிழில்லா பாதக்குறடுகள் வெளிப்போந்தது.

இப்போதும் நாகூர் தர்காவில் இருந்து வரும் நாகூர் ஆண்டகையின் பாதக்குறடுபோலவே குமிழிலில்லா காலணி ஒன்று பண்ருட்டி தர்காவிலும் இருந்து வருகிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகாலம் பல்வேறு அற்புதங்களையும் அருட்போதனைகளையும் அருளி பல இன மத சாதி மக்களை ஆண்டவனின் குடும்பமாக பாவித்து அனைவரையும் இறைவனின் திருக்கருணையினை அடையப்பெறச்செய்த ஆண்டகை அவர்கள் தங்களின் 93ம் வயதில் ஸ்தூல உடலைவிட்டு பிரிந்தார்கள்.

கரையிலா மெய்ஞ்ஞானக்கடலாம் நாகூர் காதிர் ஒலி தந்த குருவாம் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா ஆண்டகை அவர்கள் நூரே முஹம்மதின் ஒலியாக பண்ருட்டி நகரமர்ந்து இன்றும் மறைந்து மிளிரும் சுடரைப்போல தன்னை நாடிவருவோரின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றி உடல்மனப்பிணியகற்றி சூழவிருக்கும் ஆபத்துகளை போக்கி இறைவனின் திருக்கருணை பொங்கும் பேரொளியாய் திகழ்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ்! நூர் முஹம்மது ஷா ஆண்டகையின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *